| முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலைக்காக 100 பௌத்த பிக்குகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருப்பதாகத் தேசிய பிக்கு முன்னணி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. |
நாட்டுக்காகப் போராடியவரும் இன்று மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வழிசெய்தவருமான கதாநாயகன் சிறையில் துன்பப்படும் அதேநேரம், ஆயிரக்கணக்கானோரைக் கொன்று முடமாக்கிய கே.பி., கருணா, பிள்ளையான் போன்றோர் ஆடம்பர வாழ்க்கை அனுபவிப்பதாகத் தேசிய பிக்கு முன்னணியின் வண.மாதுருவாவே சோபித தேரர் குற்றம் சாட்டினார். தேசிய பிக்கு முன்னணி நேற்று ஞாயிற்றுக்கிழமை நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள முடியாதென்ற நிலையிருந்தது. இந்த நாட்டிலிருந்த 30 வருட பயங்கரவாதத்தைப் படைக்குத் தலைமை தாங்கி சரத் பொன்சேகா வெற்றிகொண்டார். யுத்தத்தை அடுத்த தளபதிக்கு விட்டுச் செல்லமாட்டேன் எனக் கூறி யுத்தத்தை முன்னெடுத்து வெற்றியை ஈட்டிக்கொடுத்த வீர புருஷர் அவர். பயங்கரவாதிகளின் மூன்று தாக்குதலில் காயமடைந்து துணிச்சலுடன் போராடி வெற்றியை ஈட்டிக்கொடுத்தவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தி பிக்குகளைக் கொலை செய்தவர்களான பிள்ளையான், கருணா மற்றும் கே.பி. சுதந்திரமாக வாழ்கின்றனர். சரத் பொன்சேகா இன்று கோப்பை, பாய் மற்றும் தலையணையுடன் சிறைவாசம் அனுபவிக்கின்றார். இதனையிட்டு முழுநாட்டு மக்களும் இன,கட்சி, மத வேறுபாடு இன்றி கவலையடைந்துள்ளனர். கொலைகாரர், குடு வியாபாரிகள் விடுதலை செய்யப்படுகின்ற நிலையில் ஏன் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய முடியாது? மானசீக ரீதியில் அவரைக் கஷ்டப்படுத்தாது விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்கின்றேன். ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் பின் ஜனாதிபதி நாடு திரும்பியதும் தண்டனையில் கையெழுத்திடமாட்டார் என நாம் எதிர்பார்த்தோம். இதனைச் செய்திருந்திருப்பின் ஜனாதிபதியின் புகழும் மதிப்பும் அதிகரித்திருக்கும். சரத் பொன்சேகா பிழை விடாத நிலையில் அவர் எவ்வாறு மன்னிப்புக் கோரமுடியும். அவரின் விடுதலைக்காக நான் உட்பட 100 பேர் கொண்ட புத்த பிக்குகள் வாழ்க்கை பூராகவும் சிறையிலிருக்கத் தயாராகவுள்ளோமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார். |
No comments:
Post a Comment